Monday, May 29, 2006

ஓர் தொலை நோக்குப் பார்வை!

நன்றி: ஆனந்த விகடன்

இந்த வார விருந்தினர் மாஃபா கே.பாண்டியராஜன்
(மனிதவள மேம்பாட்டு வல்லுநர்)


‘நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள், நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்’ என்கிற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்தான் நம்மை நமக்கே உள்ளபடி காட்டும் ஸ்கேன்!

உலக வல்லரசு நாடுகள் எல்லாம் நம்மைப் பார்த்து அச்சப்படுகிற அளவுக்கு, நூறு கோடிக்கும் அதிகமான மனித வளம் மிகுந்த தேசம் இது. அதிலும் 60 சதவிகிதம், 35 வயதுக்கு உட்பட்ட துடிப்பான இளைஞர் சக்தி. இருந்தும், திரண்டுகிடக்கும் இந்த மனித வளத்தை மூலதனமாக மாற்றாமல், பலவீனமாக்கியதுதான் சோகம்!

நம் தேசத்தில் படிப்பை முடித்து விட்டுப் புதிதாக வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 86 லட்சம் பேர். ஆனால், தகுதி வாய்ந்த பணி யாளர்கள் கிடைக்கவில்லை என ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் வேலை இடங்கள் நிரப்பப்படாமல் போகின்றன. இந்த முரண்பாடுதான் நமது மிகப் பெரிய பின்னடைவு.

அமெரிக்காவின் சாஃப்ட்வேர் பள்ளத்தாக்கில் நிறைந்திருக்கிறார்கள் நம் தமிழர்கள். மைக்ரோ சாஃப்ட், ஐ.பி.எம் போன்ற உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களின் உயர்பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறான் தமிழன். இன்னொரு மூலையில், வாழ்வதே சிரமமான கந்தகப் பூமியில், அதே கந்தகத்தை மூலதனமாக்கி முளைக்கிறான் சிவகாசித் தமிழன். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது திருப்பூர். வட ஆற்காடு பகுதியில் ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட் கள்தான் உலக சந்தையில் இந்தியா வின் பிரதானமான பங்களிப்பு. ‘தமிழர்கள் திறமை மிக்கவர்கள்’ என்று உலகம் ஒப்புக்கொள்கிறது.

ஆனால், இன்னொரு முகமோ, நடுங்கவைக்கிறது. நூறு ரூபாய் இலவச வேட்டி & சேலைக்கு உயிரைப் பணயம் வைக்கிறார்கள். வெள்ள நிவாரணம் என வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மிதி பட்டுச் சாகிறார்கள். இலவசங் களுக்காக ஏங்கிக்கிடக்கிறார்கள்.

‘நெற் களஞ்சியம்’ என்று யானை கட்டிப் போர் அடித்த வரலாறு சொல்லும் தஞ்சை விவசாயிகள், இன்று நத்தைகளைப் பிடித்து உண்ண வேண்டிய அவலம் ஏன் வந்தது? ஊருக்கே சோறு போட்ட மண்ணில் பட்டினிச் சாவுகளும், வறுமைக்குப் பயந்து தற்கொலை களும் நிகழ்வது ஏன்? தகுதியான இளைஞர்களுக்குப் பற்றாக்குறை அதிகமாவது ஏன்? புதிய தொழில் முனைப்புத் திட்டங்கள் அதிக அளவில் தமிழகத்தில் இல்லாமல் போனது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை & தொலை நோக்குப் பார்வை இல்லாமையும், வெகு சிலரின் சுயநலங்களுமே!

மனித வளத்தைப் பயன்படுத்துவதில் சீரான வேகம், சீரான வளர்ச்சி பற்றி ஆள்பவர்களும், ஆளப்படுவோரும் சிந்திப்பதே இல்லை. படிப்படியான நிரந்தர தீர்வைச் சிந்திக்காமல், எப்படி யாவது இன்றைய பிரச்னையைச் சமாளித்தால் போதும் என்கிற மனோபாவமே ஆட்சியாளர் களிடம் இருக்கிறது. ‘பசுமைப் புரட்சி’ ஓர் உதாரணம்.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற உணவு உற்பத்தியைப் பெருக்க, மனித வளத்தைப் பயன்படுத்தாமல், செயற்கை ரசாயனங்களையும், இயந்திரங்களையும் பயன்படுத்தினார்கள். விளைவு? விதைகளைக்கூட வெளி நாட்டில் இருந்து வாங்க வேண்டிய துர்ப்பாக்கியத்துக்கு ஆளானோம். கிணற்று நீர்ப் பாசனத்தை ஊக்கப் படுத்தியது அரசு. தொலைநோக்கு இல்லாத அந்த வளர்ச்சி, இன்று நிலத்தடி நீர் தீர்ந்ததும் நொண்டி யடிக்கிறது.

உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்கிற பிரிவினையை ஏற்படுத்தி, உடல் உழைப்பைக் கேவலப்படுத்திவிட்டோம். இன்று ‘ஒயிட் காலர் ஜாப்’ என்பதுதான் எல்லோருடைய கனவும்! உடல் உழைப்புக்குரிய ஊதியத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது அதிகாரவர்க்கம்.

1991 முதல் 2000&ம் ஆண்டுக்குள் 6.4 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது நாடு. ஆனால், 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அபாய மணி அடித்தது ஒரு புள்ளிவிவரம்.

‘யார் வீட்டுக் கூரை எரிந்தால் எனக்கென்ன? என் வீடு பத்திரமாக இருக்கிறது’ என்கிற சுயநலம் தான் இந்த அவலத்துக்கான ஆரம்பம். கிராமங்களை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, நகரங்களைச் சீராட்டி வளர்த்தது வரலாற்றுப் பிழை. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி வந்ததால், கிராமப்புற வேலைவாய்ப்புகள் அடையாளம் இல்லாமல் அழிந்துபோயின. மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி அக்கறை இல்லாமல், பன்னாட்டு மூலதனங் களை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் அப்படியே அனுமதிப்பது, சமகாலத்தில் நிகழ்கிற சர்வ நாசம்.

லண்டனில், அமெரிக்காவில் ஒரு வேலையைச் செய்துமுடிக்க ஆகிற செலவில் பாதி தந்தாலே போதும்... இந்தியாவில் அது இன்னும் இரு மடங்கு வேகத்துடன் முடித்துத் தரப்படும் என்று ஆர்வத்தோடு வருகிற நிறுவனங்கள், எப்போது வேண்டுமானாலும் இந்தியாவைவிட்டுக் கிளம்பிவிடலாம். காரணம், இந்தியாவில் செலவழிக்கும் பணத்தில் பாதியளவே ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போதுமானது. பிறகு, ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ என்கிற பழமொழி போல் ஆகிவிடும் நம் வாழ்க்கை.

கைவசம் இருந்த தொழில்களையும் தொலைத்துவிட்டு, வந்ததும் போனபின்பு வருத்தப் படுவதில் அர்த்தம் இல்லை. சரி, தற்போது கிடைத்து வரும் வாய்ப்புகளையாவது முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்றால், அதுவும் இல்லை. நேரடியாகவும், மறைமுக மாகவும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பைத் தரும் ‘செம்’ நிறுவனம், இப்போது ஆந்திராவுக்குப் போய்விட்டது. தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஈகோ பிரச்னை, பரம்பரைப் பகைக்கெல்லாம் தமிழக மக்களைத் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?

வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாக அதிகமாக, ஒரு தேசத்தில் சமூகக் கேடுகள் அதிகமாகும் என்பது வரலாறு. தற்கொலைகள், கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள், விபசாரம், சாராயம் போன்ற சமூக நோய்கள் அதிகமாகும். நம் தேசம் கண் முன்னே நாசமாக, நாமே அனுமதிக்கலாமா?

ஒரு காலத்தில் பி.காம் படித்தால் வேலை கிடைக்கும் என்று எல்லோரும் பி.காம் சேரத் துடித்தனர். வேலை வாய்ப்பு இடங்களைவிடப் பலமடங்கு அதிமான பி.காம் பட்டதாரிகள் இருந் தால், அத்தனை பேருக்கும் எப்படி வேலை கிடைக்கும்? ‘டீச்சர் ட்ரெயினிங் படித்தால் உடனே வேலை’ என்று போகிறபோக்கில் யாராவது கொளுத்திப் போட்டால், பரபரவென்று தங்கள் பிள்ளைகளைக் கொண்டுபோய் அந்த கோர்ஸில் சேர்த்துவிடுவார்கள் பெற்றோர்கள். இப்போது கம்ப்யூட்டர் ஜுரம் அப்படித் தொற்றிக்கொண்டு அனல் பறக்கிறது.

70 சதவிகிதம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் விவசாயம், நெசவு போன்ற தொழில்களைப் பின்னுக்குத் தள்ளி, சில லட்சம் வாய்ப்புகளை வழங்குகிற கணினி, உயிர் தொழில்நுட்பம் போன்ற துறைகளை மட்டும்தான் அரசு ஊக்கப்படுத்துகிறது. பணியிடங்களுக்கு ஏற்றாற்போல் பரவலாக எல்லாப் படிப்புகளுக்கும் சம அந்தஸ்து அளிக்கத் தவறிவிடுகிறோம்.

உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற மூன்று விஷயங்கள்தான் இன்று ஏழை நாடுகளின் தலை எழுத்தைத் தீர்மானிக்கின்றன என்கிற உண்மை படித்தவர்களுக்கேகூடப் புரிவதில்லை.

கண்ணுக்கு முன்னால் வேலையும், வேலை பார்க்கும் சமூகச் சூழலும் மாறிக்கொண்டே வருகிறது. ‘கார்ப்பரேட்’ உலகத்தில் வீடே அலுவலகமாகவும், அலுவலகமே வீடாகவும் இருக்கிறது. எட்டு மணி நேரம் வேலை என்கிற தொழிலாளர் நலன்கள் இப்போது கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. பல மடங்கு மனித வளம் சும்மாவே இருக்க, குறிப்பிட்ட கூட்டத்தை மட்டும் பிழிந்து எடுக்கிறார்கள். இதன் நீட்சியாக ஒரு கட்டத்தில், மேலை நாடுகளின் குப்பைகளை எல்லாம் நாம் கொண்டாடத் தொடங்கிவிட்டோம். நம் இளைஞர்களுக்கு ‘சாட்டர்டே ஃபீவர்’ தொற்றியிருக்கிறது. வாரம் முழுவதும் வேலை பார்த்த களைப்பை மறக்கடிக்க, சனிக்கிழமை மாலைகளில் குடித்துச் சீரழிகிறார்கள். நிறுவனங்களே இந்தக் கலாசாரத்தை ஊக்கப்படுத்து கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை விபத்துகள் அதிகரித்து இருப்பதற்கும், சனிக்கிழமை இரவுகளில் அதிகமான உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதற்கும் இந்த ‘சாட்டர்டே ஃபீவர்’தான் முக்கியக் காரணம்.

குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் அளவுக்கு அதிகமான ஊதியம். கணிப்பொறி, பி.பி.ஓ. போன்ற நவீன துறைகளில் இருபது சதவிகிதம் பேர்தான் வேலை பார்க்கிறார்கள். அதே நேரம், இந்தியாவில் தொழிலாளர்களாக இருப்பவர்கள் 40 கோடிப் பேர். 20 சதவிகிதத்தினரின் சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டு, வீட்டு வாடகை முதல், காய்கறி வரை... அதிக ஊதியம் பெறுவோரின் பொருளா தாரத்தையே மீதமுள்ள 80 சதவிகிதம் பேருக்கு அளவுகோலாக வைக்கிறது சமூகம்.

வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது என்பது, ஆயிரக்கணக்கானோர் பணி புரியும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு, சில நூறு பேர் வேலை பார்க்கும் பி.பி.ஓ&க் களைத் திறப்பது இல்லை. பாரம்பரியம், நவீனம் என்கிற இரண்டு தட்டுகளும் சரிவிகிதத்தில் இருந்தால்தான், வளர்ச்சித் தராசின் முள் நிமிர்ந்து நேராக நிற்கும்.

காய்கறிகளின் விற்பனை வெகுவாகக் குறைந்து, மது வகைகள் அதிகம் விற்பனையாவது ஆரோக்கியமான தொழிலாளர் சமூகத்தை உருவாக்காது. அரசும், மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டியது உடனடித் தேவை. வெளிநாடுகளில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்து, நாம் அவர்களின் பொருட்களைப் பயன் படுத்துகிற நுகர்வோர்களாக மட்டுமே இருக்கக் கூடாது. மனித வளத்தைப் பயன்படுத்தித் தொழில் நுட்பம் மற்றும் சிறுதொழில்களைப் பெருக்க வேண்டியது அவசர, அவசியம். விவசாயம், நெசவு, கைவினைப் பொருட்கள் போன்ற மரபான தொழில்களையும் வளர்த்தெடுக்க வேண்டும். வாழ்வதற்குத் தான் வேலையே தவிர, வேலை பார்ப்பதற்காகவே வாழ்வது என ஆகி விடக் கூடாது.

நம்முடைய கிளைகள் நீளமாக வளர்ந்து, நிழல் பரப்பிப் பூத்துக் குலுங்கட்டும். அதே சமயம், நமது வேர்களைத் தொலைத்துவிடக் கூடாது நண்பர்களே!

‘மானுட சமுத்திரம் நான் என்று கூவு’ என்று உலக அரங்கில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். அதற்கான ஒரே ஆயுதம், நமது மனித வளம்தான்! அதைக் கூர்தீட்டிக் கொள்வோம்.

4 Comments:

At 2:12 AM, Blogger ஜெயக்குமார் said...

தியாகிகள் வாழ்ந்த பூமியில், இன்று விஞ்சி நிற்பது சுயநலமே!. எனவே இதெல்லாம் சாத்தியமா என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது.

சம்பந்தப்பட்டவர்கள் ஒருங்கினைந்து தான் இதற்கு தீர்வு கானவேண்டும். அவர்கள் ஒருங்கினைவது, எதாவது புரட்சி நடந்தால் தான் உண்டு.

 
At 10:33 PM, Blogger செந்தழல் ரவி said...

தமிழ்மணத்தில் சேர்க்கவில்லையா ?

 
At 4:43 AM, Blogger Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

 
At 8:44 AM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

<< Home